We happened to receive the following letter. Ave Maria appreciates the priest who has written this open letter. While most of the letters about the Bishop are anonymous, this has been sent properly and bravely. I think the Bishop must be angry with this priest. Instead of thinking about his false administration, he would immediately think about the punishments to be inflicted on him. Yvon Bishop is treating the priests and faithful as slaves. No one should ask questions. There are some priests who are always praising him to heaven only to get privileges and favours from him. They do not know that he is not deserving to the praises. What has he done for our diocese? We are pleased to publish this small piece of thought provoking and brave letter. The Bishop will not worry about it. But we we hope that this small piece of authentic writing will open the eyes priests of Tuticorin Diocese.
தூத்துக்குடி மறைமாவட்ட மேதகு ஆயர் அவர்கட்கு மனம் திறந்த கடிதம்.
ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் திருப்பெயரில், எம் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கு, தாங்கள் நூறாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்து கிறேன்; தங்களது ஆசீர் வேண்டி வணக்கத்துடன் எழுதுகிறேன்.
2017 தங்களின் பணி நிறைவு ஆண்டு என்பதால், ஏப்ரல் ஐந்தாம் தேதி கடிதம் தந்து, பதிமூன்றாம் தேதிக்குள் குருக்கள் மாமன்றத்தில் மனம் திறந்த பகிர்வு செய்வதற்காக, கருத்து கேட்கிற தாழ்மைக்காக நன்றி.
1) “புனித சவேரியார் ஏழை மாணவர் நிதி” என்ற அமைப்பை தாங்கள் உருவாக்கி, எத்தனையோ ஏழைகளின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த புனிதமான சேவையை, 2017 ஆகஸ்டு மாதத்தில் பணி நிறைவு பெற்றுச் செல்லவிருக்கும் தங்களுக்கு அடுத்து வரும் ஆயர் அல்லது பொறுப்பாளர் தொடரச் வேண்டும் என்பது நல்லோரின் மன்றாட்டு. தொடரச் செய்வீர்களா?
2) கடந்த மாதம் குருக்கள் பேரவைக்கு (ஈ மெயில் வசதி உள்ளவர்களுக்கு) ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். தங்களுக்கும் நகல் அனுப்பியிருந்தேன். நான் அனுப்பியது அதிகாலை 12.32 க்கு. ஆனால், அன்றே காலை 10.30க்கு தங்களது செயலர், தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டார். ஒரு பிரச்னைக்குப் பதில் அனுப்பி விட்டீர்கள். துரித சேவைக்காக வாழ்த்தாமல் இருக்க முடியுமா?
இதுபோன்றே, மற்ற நீதியான கோரிக்கைகளுக்கும் பதில், விரைவில் தர வேண்டு மல்லவா? நீதியான முறையில், எனக்கு என்றோ தந்திருக்க வேண்டிய, இரு சக்கர வாக னத்தை தந்து விடுவதாக, வருடங்களை, மாதங்களை, நாட்களை மாற்றி மாற்றி, இப்பொ ழுது வருகிற 2017 ஜூன் மாதத்திற்குள் என்று சொல்லியுள்ளீர்கள்.
இப்படிப்பட்ட வாக்குறுதிகளை, பிரச்சனையின் முன்னுரிமை அறிந்து, உரிய நேரத்தில் நிறைவேற்றிவிட்டால், பாதிநாள் வெளிநாட்டிலும், பாதி நாள் குருக்களுக்கு தேவையில்லாத கடிதங்கள் எழுதி வேதனைப்படுத்தும் குற்றச்சாட்டும் மெதுவாக 2017 ஆகஸ்டுக்குள் மங்கிவிடும். வாக்குறுதி நிறைவேறச் செய்வீர்களா?
3)வழக்கமாக INTER NOS ல் சுமார் பதினாறு பக்கங்கள் மட்டுமே எழுதும் நீங்கள், தங்களுக்கு 2017 ஆண்டு, ஆகஸ்டு இறுதி மாதம் பணி நிறைவு என்பதாலோ, நான்காம் மாதத்தில் நான்கு பக்கங்களில் நிறைவு செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
4).கடந்த ஆண்டு பில்லர் தியானத்தில், இரண்டு சாதியை தூக்கிப் பிடிக்கும் சில தீவிர குருக்கள், உணவு நேரம் மட்டும், காலம் தவறாமை கடைப்பிடித்தார்கள். மற்ற எந்த வழிபாட்டிற்கோ, செய்திக்கோ வரவில்லை. இதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். ஆனால் கடைசி நாளில், அதை சுட்டிக் காட்ட தைரியம் இல்லாமல், நீங்கள் எல்லாரும் நன்றாக தியானம் செய்தீர்கள்; பங்கு பெற்றீர்கள் என்று வாழ்த்தினீர்கள். அப்படியானால், அவர்கள் உங்களை பயமுறுத்துகிறார்களோ என்று பேசப்படுவது உண்மைதானோ? என்ன சொல்லி பயமுறுத்துகிறார்களோ என்பதுதான் மறைபொருளாக உள்ளது.
5.)மறைமாவட்டத்தைப் பிரிக்கிறேன் என்று, தூத்துக்குடிக்குள்ளும், அருகிலும் உள்ள பங்குகளை வள்ளியூரில் சேர்க்கவும் துணிந்தீர்கள். (அதை எதிர்த்து “கத்தோலிக்கர் களுக்கு அவசர கடிதம்” என்று, எனது பத்திரிகையில் மட்டுமல்ல, தினத்தந்தி, தினமலர், தினமணி, மாலை முரசு என்று நான்கு தினசரி செய்தித்தாள்களிலும் வெளியிட்டேன். அது உண்ணாவிரதப் போராட்டமாக பரிணமித்தது. தமிழக முதல்வர், கவர்னர், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் போன்றோருக்குக் அவசர கடிதம் எழுதி, மறை மாவட்டத்தில் சாதிக் கலவரம் ஏற்படலாம் என்று மனு அனுப்பினேன். தங்களுக்கோ அது பிடிக்கவேயில்லை. அரசின் தரப்பிலிருந்து எச்சரிக்கை வந்ததால், மறைமாவட்ட பிரிவு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று உடனே அவசர சுற்றறிக்கை அனுப்பி உங்களது திட்டத்தை நீங்களே நிறுத்தி விட்டீர்கள், மிக்க நன்றி.
உங்களது திட்டத்தின்படியே மறைமாவட்டத்தைப் பிரித்தால் எத்தகைய படு பாதகங்கள் ஏற்படும் என்று மறைமாவட்டமே மிகவும் கவலைப்பட்டது. இனி நீங்களோ அல்லது தங்களுக்கு அடுத்து வரும் ஆயர் அல்லது பொறுப்பாளரோ மறைமாவட்டத்தைத் தவறாக (அதாவது கிறிஸ்தவக் கண்ணோட்டத்திற்கு எதிராக அல்லது நற்செய்தி விழுமி யங்களுக்கு எதிராக) பிரிக்கும் செயலை செய்யாமலிருக்க ஏற்பாடு செய்வீர்களா?
6) கடந்த குருக்கள் பேரவை கூட்டத்தில் பங்கேற்ற ஒருவரின் வாக்குமூலத்தின்படி மறைமாவட்டத்தில் தற்போது 15 இலட்சம் ரூபாய் மட்டுமே உள்ளது என்றும், மற்றொரு உறுப்பினரின் வாக்குமூலத்தின்படி கொஞ்சமே உள்ளது என்றும் குறிப்பிட்டு, நம் மறைமாவட்ட பொருளர் சங்கைக்குரிய சகாய ஜோசப் எப்படித்தான் சமாளிக்கிறாரோ என்று வானளாவ பாராட்டியிருக்கிறீர்கள். ஆனால் சில மாதங்களுக்கு முன் 20 இலட்சம் ரூபாய்க்கு தங்களுக்கு புதிய வாகனம் வாங்கித் தந்திருக்கிறார். இதற்கும் பாராட்டியிருக்கலாமே?
7) சுனாமி நிதி உதவி பற்றிய வெள்ளை அறிக்கையை மக்களும் குருக்களும் கேட்டும் இதுநாள் வரை பதிலே இல்லை என்கிறார்கள். 2017 ஆகஸ்டில் தாங்கள் செல்வ தற்கு முன்பாவது, புள்ளி விபரங்களுடன் வெள்ளை அறிக்கையை வெளியிடுவீர்களா?
8) மேதகு தாமஸ் ஆயர் முதல்முறை தன் சொந்த ஊராகிய இடிந்தகரை வந்தபொழுது, இடிந்தகரை மக்கள், 101 பவுண் தங்கத்தில் செங்கோல் மேல் வளைவு செய்து கொடுத்தார்களாம். இடிந்தகரை வரும்போதாவது அதை ஆயர் கொண்டு வரலாமே என்று சில மாதங்களுக்கு முன்பாக நீங்கள் இடிந்தகரை வந்திருந்தபொழுது ஒருவர் கேட்டார்.
கடந்த ஆண்டு ஒருவர் இது பற்றிய விபரம் கேட்டு இருமுறை பதிவுத் தபால் அனுப்பியிருந்தார். மனிதநேயமிக்க தாங்கள் பதில் ஏதும் வழங்க வேயில்லை. 2017 ஆகஸ்டுக்கு முன்பாவது, இடிந்தகரை மக்கள் அடிக்கடி விசாரிக்கிற ஐயம் தீர்ப்பதை செய்வீர்களா?
9) ஏப்ரல் மாத நிகழ்வில் ஒரு நாள் கூட வெளிநாடு பயணம் இல்லை. உங்கள் முன்னுரிமை எல்லாம் நீங்கள் நியமிக்கப்பட்ட தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கே சொந்தம் என்ற தூய ஆவியானவரின் குரலைக் காலதாமதமாகக் கேட்டாலும் இப்பொழுது செயல்பட முன்வந்த தங்களின் உயர்ந்த எண்ணத்தைப் பாராட்டுகிறேன்.
10) உங்களது பணிக்காலம் 2017 ஆகஸ்டில் முடியப்போவதால், கடந்த குருக்கள் தியானத்தின் கடைசி நாளில், 2017 ஆகஸ்டு முடிவில் சென்று விடுவதாக வாக்குறுதி அளித்தீர்கள். அதை உறுதிப்படுத்துகிறவிதமாக, 2017 ஏப்ரல் 11 குருத்துவ வாக்குறுதி நாள் புதுப்பித்தல் நாள் திருப்பலி மறையுரையில், “குருத்துவத்தில் ஒன்று முதல் 70 ஆண்டுகள் வரை அனுபவமுள்ள குருக்கள் இதுநாள்வரை தந்த ஒத்துழைப் பிற்காக முதற்கண் நன்றி” என்றும், மறையுரையின் இறுதியில், “வாழ்த்து கூறி விடை பெறுகிறேன் நன்றி” என்றும் சொன்னபோது அனேகரின் முகங்களில் மகிழ்ச்சி கண்டேன்.
மறைமாவட்டத்தில் பல கோடி ரூபாய் கடன் இருக்கிறது. அவைகளை அடைத்து விட்டு செல்ல கால நீட்டிப்பு நீங்கள் கேட்டிருப்பதாகவும் ஒரு வதந்தியை சிலர் பரப்புகிறார்கள். நான் அதை நம்பவில்லை. உங்கள் வாக்கை மீறமாட்டீர்களே? ஒருவேளை, தாங்கள் அப்படி சொல்லியிருக்கக் கூடுமானால், குருக்களுக்கு எதிர்சாட்சியாக நீங்கள் மாறிவிடுவீர்களே? ஒவ்வொரு குருவும் கடன் இருக்கிறது என்று சொன்னால் அதே பங்கில் நீங்கள் அந்நபரை தொடர விடுவதில்லை என்பதும் நீங்கள் மறவாத உண்மைதானே?
நீங்களே பல வழக்குகளை நடத்தி பல இலட்சங்களை விரயம் செய்து கொண்டிருப்பதும்; நீங்கள் பயன்படுத்தும் வழக்கறிஞரோ, தமிழ் மாநில அளவில் RSS ன் முக்கிய தலைவராகவும், மத்திய அரசின் வழக்கறிஞராகவும் செயல்படும் நபர் என்பதும் எமக்கு கவலையான செய்தியாகும்.
அப்படியே கடன் இருந்தாலும், நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்பதே அநேகரின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது. உங்களமேல் எத்துனை அன்பு, பாருங்கள்.!
ஒருவேளை, உங்களுக்குப் பின் மறு ஆயர் உடனே நியமிக்கப்படாவிட்டாலும், ஒருவேளை உங்களைத் தொடரச் சொன்னாலும், நீங்கள் தந்த வாக்குறுதியின்படி, மறைமாவட்ட ஆயர் பொறுப்பை பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து விடுவீர்கள் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த குருக்களின் இந்த வேண்டுகோளை செய்வீர்களா?
11) முந்தைய ஆண்டுகளில், ஒருவரே குருக்களின் பணி இடங்களை நியமித்திருக்கிறார் என்று சொல்லப்படுவதாலும், நீங்களே பணி இடங்களைக் குறித்து வந்து, ஆலோசனை உறுப்பினர்களை ஆமென் சொல்ல பழக்கியிருப்பதாகவும் பேச்சு இருப்பதால், பாவப் பரிகாரமாக, உங்களது பணி வாழ்வின் இறுதி ஆண்டு 2017 பணி நியமனமாவது நீதியாயிருக்கும்படி செய்வீர்களா?
12) அநாதை பிள்ளைகளின் நிலத்தை விரிவாக்கவேண்டியது உங்கள் கடமையாகும், ஆனால், பல ஏக்கர் நிலங்களை விற்றது; ஆயர் இல்லத்தை சூழ்ந்திருக்கிற, அறநிலையத்திற்கு சொந்தமான வீடுகளையும் கடைகளையும் மிகக் குறைந்த விலையில் விற்றது; ஆங்கில வழிக் கல்விக் கூடம் கட்டுவதற்காக என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்பொழுது நமக்குரிய பக்கத்து தமிழ் பள்ளிக்கூடங்களையும் பாதித்து, போதுமான எண்ணிக்கையும் கிடைக்காமல், தோற்றுப்போன சாத்தான்குளம் ஆங்கில வழிக் கல்விக்கூடம் கட்டியதற்கான உங்கள் கனவு நிறைவேறாமல் போனதை நினைத்து நாங்கள் கண்ணீர் வடிக்கத்தான் முடியும். வேறென்ன செய்ய முடிகிறது?
இப்பொழுதும் கூடுதல் நிலம் விற்பனை காரியத்தில் தந்தை இசிதோர், “இது மனசாட்சிக்கு எதிரானது” என்று மறுக்க, “கீழ்ப்படி”(OBEY) என்று நீங்கள் மிரட்டுவது நியாயமா?
இன்னும் 100 பக்கங்கள் எழுத மனம் துடிக்கிறது. ஆனால்,வலிக்கிறது; ஆகவே, என் விரல்களுக்கு கட்டளை கொடுக்கிறேன். இக்கடிதத்தில் கருத்து, எழுத்து பிழை இருக்கலாம். மன்னிக்க வேண்டுகிறேன்.
உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் மேல் எனக்கு பகையோ வெறுப்போ கிடையாது. நம் கத்தோலிக்கத் திருச் சபை மீதுள்ள தணியா தாகம்தானே தவிர வேறொன்றுமில்லை. ஆகவேதான் பெயரில்லாமல் எழுதும் கோழையாக இல்லாமல், இதுநாள்வரை என் பெயரில் வெளிப்படையாக எழுதியுள்ளேன், இதனை நீங்கள் புரிந்து கொண்டால் ஆண்டவராம் இயேசுவுக்கும், ஆயரான உங்களுக்கும் கோடி நன்றி.
2011 செப்டம்பர் 11 ம் தேதி அன்று, கடற்கரை மக்கள் தங்களை சந்திக்க வந்தபோது, வேலைப்பளுவின் காரணமாகவோ, ஆழ்நிலை மன்றாட்டின் காரண மாகவோ, அறைக்குள் இருந்துகொண்டு சந்திக்க மறுத்தும், பின் மனம் இரங்கி, இறங்கி வந்தீர்கள். ஆனால், அவர்களை சந்தித்து திரும்பும் போது, “இவர்களுக்காக பரிகார பூஜை வைக்க வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தீர்கள். “இவர்களும் உங்களது பிள்ளைகள் தானே, உங்களது ஆட்டுக் குட்டிகள்தானே?” என்று கலங்கினேன். ஆகவே, என்னைப் போன்றோர்மீது கோபம் கொள்ளாமல், ஆசீர்வதியுங்கள்.
இறையாசீர் வேண்டும்,
தந்தை. ஜேம்ஸ் பீட்டர்.
நகல்: தூத்துக்குடி மறைமாவட்ட குருக்கள்.